Friday, September 23, 2011

தோசை

                     தோசை
                 வேண்டியவைகள்.
இட்டிலிக்கு  உபயோகிக்கும்   புழுங்கலரிசி—3 கப்
பச்சரிசி—–1 கப்
துவரம்பருப்பு—-கால்கப்
வெந்தயம்—5 டீஸ்பூன்
நல்ல விழுது காணும் உளுத்தம் பருப்பு—-1 கப்
தேவைக்கு—-உப்பு
செய்முறை
அரிசிவகைகள்,   துவரம்பருப்பு,   வெந்தயம் இவைகளைத்   தண்ணீர்-
-விட்டுக் களைந்து  சுத்தம் செய்து   நல்ல தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.
இதே போல் உளுத்தம் பருப்பையும்    நன்றாகக் களைந்துத் தனியாக
தண்ணீர் விட்டு ஊறவைக்கவும்.
அரிசி நன்றாக  ஊறினால்   சீக்கிரம் அரைபடும்.
குறைந்த பக்ஷம்   5,   6 மணிநேரம் ஊறினால் நல்லது.
பருப்பு 2,  3 மணி நேரம் ஊறினால் கூட போதும்.
கிரைண்டரை  நன்றாகச்  சுத்தம்  செய்து  அலம்பி  முதலில்
உளுத்தம் பருப்பைப் போட்டு    திட்டமாக தண்ணீர்  தெளித்து நன்றாக
அரைக்கவும்.   பஞ்சுப் பொதி  மாதிரி,  நன்றாகக்   குமிழ்கள் வரும்படி
அரைக்கவும். நல்ல கிரைண்டரானால்   40 நிமிஷமாவது ஆகும்.
உளுந்து  மாவைப்   பூரவும்   எடுத்துவிட்டு,  அரிசியைச் சிறிது,சிறிதாகக்
கிரைண்டரில் போட்டு தண்ணீர் திட்டமாகச் சேர்த்து   நன்றாக  மசிய
வெண்ணெய் போல  அரைக்கவும். இட்டிலி மாவைப்போல அல்ல.
நைசாக அரைக்கவும்.   இப்போது வேண்டிய உப்பையும் சேர்க்கவும்.
2, 3 சுற்றுகள் சுற்றி    முதலில் அரைத்து வைத்த உளுந்து விழுதையும்
சேர்த்து அரைக்கவும்.
இரண்டு  மூன்று  நிமிஷத்தில்  மாவுக்கலவை ஒன்று சேர்ந்துவிடும்.
நல்ல சுத்தமான   பாத்திரத்தில்   மாவை எடுக்கவும்.தேவைக்குத் தக்கபடி   மாவைக் கொஞ்சம் வெளியில் வைத்தும்,
மிகுதியை   ப்ரிஜ்ஜில் வைத்தும்   உபயோகிக்கலாம்.
மாவு சற்று  பொங்கி வருமளவிற்கு   முதல்உபயோக  மாவு வெளியில்
இருக்கலாம்  .   மிகுதி பிரிஜ்ஜில் இருந்தால்கூட   மாவை  2,  3, மணி நேரம்,
தோசை வார்க்குமுன்னர் வெளியே எடுத்து வைத்தால் கூட போதும்.
மாவு பதமாக இருக்கும்.
தோசை வார்ப்பதற்கு நான்ஸ்டிக் தோசைக்கல்தான் சுலபமாகவுள்ளது.
கல்லில்  எண்ணெய்  தடவ,  உருளைக் கிழங்கை பாதியாக  நறுக்கி
எண்ணெயில் தோய்த்து உபயோகிக்கலாம்.
மாவைச்  சற்று  கெட்டியாகவே  கரைத்து வைத்துக் கொள்ளவும்.
கல்லில் எண்ணெய் தடவி   சூடாக்கவும்.
தீயை சிம்மில் வைத்து  ஒரு கரண்டி மாவைக் கல்லில் விட்டு அடி-
-தட்டையான  கரண்டியினால்  மாவைச் சுழற்றி தோசையாகப்
பரப்பவும்.
தீயை அதிகமாக்கி,   தோசையைச் சுற்றிலும்   ஒரு டீஸ்பூன் எண்ணெய்
விடவும்.
தோசையின் மேல் பல   பொத்தல்களுடன்  ஈரப்பதம் குறையும்.
பதமாக தோசையைத் திருப்பிப் போட்டு  தீயைக் குறைக்கவும்.
அடிப்பாக தோசை சிவக்க ஆரம்பித்தவுடன்,  திருப்பிப்  போட்டு
மடித்து எடுக்கவும்.
கரகரஎன்று  தோசை நன்றாக வரும்.
எண்ணெய் தடவி   தோசையைப்பரப்பி, தீயை அதிகமாக்கி சுற்றிலும்
எண்ணெய்விட்டு , மேலே சொன்னபடிதான்  மிகுதியும்.
இதுவே ஹாட் ப்ளேட்டானால்    தீயைக் குறைத்தால் கூட  ஒரு
தோசையின்இடைவெளியில் மற்றொன்று வார்க்குமுன்  சிறிது
தண்ணீரைத் தெளித்து கல்லைத் துடைத்து வார்த்தால்  தோசை
சரியாக   எடுபடும்.
சரியாக புரிந்து கொண்டால் தோசை பட்டு பட்டாக வரும்.
தோசைத் திருப்பியை  நுணியில் மாவு ஒட்டாமல் சுத்தமாக
வைத்துக்  கொள்ளுதல் அவசியம்.
பசங்களுக்கு   சட்டென்று   அரைத்துப் போட ஒரு சட்னியும் கூட இதோ.
1வெங்காயம்,  ஒரு தக்காளிப்பழம், 1 பச்சைமிளகாய் நறுக்கிக்கொண்டு
எண்ணெயில் வதக்கவும்.
3டேபிள்ஸ்பூன்   வேர்க்கடலையையும் சிவக்க வறுத்து கூட வைத்து
உப்பு சேர்த்து அரைத்தால்   திடீர் சட்னியும் தயார்.   வேறு என்ன சேர்க்க
நினைக்கிறீர்களோ   அதையும் சேர்த்து அரையுங்கள்.
வீட்டில் தோசை மாவு இருந்தால் துணைக்கு ஒருவர் இருப்பது போல.

உருளைக்கிழங்கு   கறி வைத்த மசால் தோசை செய்யலாம்.
லேசாக சீஸ் தூவி  தோசையை  மடிக்கலாம்.
டொமேடோ,  வெங்காயம்   வதக்கி வைத்து  தோசையை மடிக்கலாம்.
தோசையை மடக்கும் போது   சிறிது  வெண்ணெயைத் தடவி துப்பா-
-தோசை   தயாரிக்கலாம்.
ஊத்தப்பம்,  நமது ரசனைக்கேற்ப    பொருள்களைக் கூட்டி விதவிதமாக
தயாரிக்கலாம்.
சுடச்சுட சாப்பிட கரகரதோசையும்,   எடுத்துப் போக   மெத்தென்ற
மிருதுவான தோசையும்   தயாரிக்கலாம்.

No comments:

Post a Comment