Friday, September 16, 2011

பொறுப்பற்ற மக்கள்

சுயநலமும் தொலைநோக்கு பார்வையும் அற்ற அரசியல்வாதிகள் தான் தீவிரவாதங்கள் மற்றும் பேரழிவு ஆயுதங்கள் பெருக முக்கிய காரண கர்த்தாக்கள் என்பது சரி. ஆனால் யார் இந்த சுயநல அரசியல்வாதிகள்? எப்படி உருவானார்கள்? யார் உருவாக்கினார்கள்? இப்படிப்பட்ட அரசியல்வாதிகள், உலகம்முழுவதும் அரசாங்கம் அமைக்க காரணமானவர்கள் யார்?

தொலைநோக்குபார்வையோடு விடைதேடிப்பாருங்கள், இப்படிப்பட்ட அரசியல்வாதிகளை உருவாக்கியவர்கள் பட்டியலில் உங்கள் பெயரும் பதிந்திருக்கும். இன்று உலகின் பெரும் பான்மை நாடுகளில் மக்களாட்சி மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தான் அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒவ்வொரு நாட்டுமக்களின் முதன்மை பிரதிநிதிகள் தான் இந்த அரசியல்வாதிகள். அப்படியானால் இத்தகு அரசியல்வாதிகள் உருவாக முக்கிய காரண கர்த்தாக்கள் மக்கள் தானே.

ஆம்! அரசியல்வாதிகளின் அடுத்தடுத்த செயல்களை சரி & தவறு எனறு பிரித்து கூட பார்க்காமல், எல்லாவற்றிற்கும் ஆமாம் போடும் பொறுப்புணர்ச்சியற்ற மக்கள் தான் சுயநலபோக அரசியல்வாதிகள் வளர காரணமானவர்கள்.

நான் தற்போதைக்கு பாதிக்கப்படுவதில்லை. எது எக்கேடு கெட்டால் எனக்கு என்ன? யார் எத்தகு ஆயுதங்களை பெருக்கிக்கொண்டால் எனக்கு என்ன? நான் மட்டும் பாதிக்கப்படுவதில்லையே?, அதுமட்டுமல்ல அணுஆயுதம், போர் இதெல்லாம் அணுவிஞ்ஞானிகள், ராணுவம், சம்மந்தப்பட்டது. அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது. தெரியாத ஒன்றில் என் மூக்கை நுழைக்க நான் விரும்பவில்லை. அது பற்றிய அக்கரையும் எனக்கு இல்லை. அப்படியே அக்கரை எடுத்துக்கொண்டாலும் அதில் தலையிட எனக்கு நேரமில்லை. என் பிரட்சனைகளை பார்க்கவே எனக்கு நேரமில்லை. பின் எப்படி நான் சர்வதேச பிரட்சனைகளை பார்ப்பது? என்றாவது உலகம் அழியக்கூடுமானால் அழியட்டும். உலகோடு நானும் அழிந்துபோகிறேன் அவ்வளவு தான். இப்போதைக்கு என் சுயப்பிரட்சனைகளை மட்டும் பார்க்கிறேன். பொது பிரட்சனைகள் அதன் போக்கிற்கே போகட்டும். இப்படி அவரவர் போக்குக்குப் போகும் விழிப்புணர்வும், பொறுப்புணர்ச்சியும் இல்லாத மக்கள் தான் எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாக்கள்.
சமாதானத்தையும் சமத்துவத்தையும் விரும்பும் நல்லெண்ணவாதிகள் ஒதுங்குவதுதான் சுயநல போக அரசியல்வாதிகளின் பெருக்கத்திற்கு முக்கிய காரணம்.

இன்று உலகே பேரழிவுக் கிடங்காகி அழிவின் விளிம்பில் நிற்கிறது என்றால் மக்களாட்சியில் ஓட்டளித்து மதிகெட்ட அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்த மக்கள் தான் முழுக்க முழுக்க காரணகர்த்தாக்கள்.

உலகில் பெரும்பான்மை மக்களிடம் சமாதான எண்ணங்கள் மட்டும் இருந்தால் போதாது, அதை சமுதாயத்தில் செயல்படுத்திக் காட்டும் அணுகுமுறை ஆற்றல் இருக்க வேண்டும்.

அரசியலை நிர்ணயித்து அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் அறிவு மடடும் இருந்தால் போதாது; அரசியல் குறித்த விழிப்புணர்வும், அரசியல்வாதிகளை காண்காணிக்கும் பொறுப்புணர்ச்சியும் இருக்க வேண்டும்.

சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது; சமுதாயத்தில் நடக்கும் சுரண்டல்களையும், அதிகார அத்துமீரல்களையும் தட்டிக் கேட்டு எதிர்த்து போராடும் துணிச்சல் இருக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தொலை நோக்குபார்வையும் அதை எப்போதும் நடைமுறை வாழ்வில் நிலைநிறுத்தும் கடமை உணர்வும் மக்கள் மனங்களில் இருக்க வேண்டும்.

மேற்சொன்ன எதுவுமே இன்றைய மக்களிடம் இல்லாததால் தான் பேரழிவு ஆயுதங்கள் உட்பட இத்தனை அவலங்களும் அரங்கேறிக்கிடக்கிறது.

No comments:

Post a Comment