Thursday, June 25, 2015

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?

மரியாதைக்குரியவர்களே,
                       வணக்கம்.சட்டத்தை மதிப்போம்.தலைக்கவசம் அணிந்து நம் உயிர் காப்போம்.எஸ். அசோக் (விகடன் செய்திகள்-24.06.2015)அவர்களது ஆதங்கத்தை தலையங்கமாக எண்ணிப் படியுங்க..
 ஸ்ரீனிவாசன் வாசு 1 புணரமைக்காத சாலைகள் பல உண்டு,.
2 Drunk and drive
3 Over speed

4 Over seated person
5 Licence given illegally..லஞ்சம் வாங்கிக் கொண்டு..
6 Proper signal working
இது அனைத்தும் விதிகளின் படி சரியாக நடந்தால் விபத்து என்பது அரிது,


                      தரமற்ற சாலை, வாகன நெரிசல், வாகனப்பெருக்கம் போன்றவற்றை மக்களுக்காக தாமாக வந்து விசாரிக்காமல், அன்றாடம் புதியனவாக பதியப்படும் வாகனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெல்மெட் மூலமே உயிர் காக்கப்படும் என்று 
                     வரும்2015 ஜூலை-1 ந் தேதி முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட் சட்டம் அமலுக்கு வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
                      விபத்துக்களை குறைக்காமல், ஹெல்மெட் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி, 'ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் ஆயுள் காக்கும்' என்ற போலீசின் பிரசாரம் இடைத்தேர்தலை விட சூடு பிடித்துள்ளது.
ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி செலவழித்து போடப்படும் தரமற்ற சாலையின் அவல நிலையை பார்த்து நீதிமன்றம், அரசிடம் சாலையின் தரத்திற்கான தரச் சான்று கேட்காமல், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் சர்வதேச தரச் சான்றுடன் ரசீதுடன் உள்ளதா என சோதனை செய்யச் சொல்வதை, புரியாத புதிராக உள்ளதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.
                      திரும்பிய இடமெல்லாம் ஹெல்மெட் கடைகள். தலைக்கு விலை வைக்கும் தலைக் கவசம், கடைகளில் தலை கீழாகத் கட்டித் தொங்க விடப்பட்டு, உயிரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஊழலில் ஊறிப்போன உயிரற்ற சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிர் காக்க சட்டம் போட்ட நீதிமன்றம், சாலையின் உயிருக்கு எந்த உத்தரவாதமும், கேள்வியும் கேட்காத நிலையில், சாலையை முழுவதுமாக தரமாக போடாமல் (கமிஷன் பிரச்னையோ? ) சாலைக்கு பஞ்சர் ஒட்டும் வேலையை அரசு துரிதமாக நடத்தி வருகிறது.
            வண்டி ஓட்டுனர் பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம் கண் முன்னாலிருக்கும் சாலையை தரமாக போடச் சொல்ல மறந்து விட்டதே?

                   மோட்டார் வாகனச் சட்டம், நீதிமன்றம், போலீசாரால் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதே புரியாத நிலையில், விபத்தை கொடுக்கும் வாகன நெரிசல் பற்றியும், விடை தெரியாத இதர சட்டம் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன...

                 1. காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. முன்னணித் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் கூட சீட் பெல்ட் அணியாமல்தான் வாகனத்தில் வருகின்றனர். சட்டம் பேச முடியுமா?
                      போலீஸ் உயர் அதிகாரிகள் முன் இருக்கையில் அமர்ந்து செல்கையில் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? போக்குவரத்து போலீசார் சீட் பெல்ட் அணிந்து வந்ததாக செய்தி உண்டா? வட்டாரப் போக்குவரத்து ஆய் வாளர் ஓட்டுனர், சீட் பெல்ட் அணிந்து வருகிறார்களா? சட்ட மேதைகளின் ஓட்டுனர்கள் கூட சீட் பெல்ட் அணிகின்றனரா?
                    2. சக பயணிகளை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்க மோ.வா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. திண்டுக் கல்லில் போலீஸ் உடையில் இருந்த எஸ் .ஐ., பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு என்ன அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?? .
                  3. சட்டப்படி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் செல்வது தவறு தான்....அதற்காக சென்னை கே.கே நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்றவரின் சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை கொன்றதை சட்டம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது நியாயமா?
              4. விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக ,மோசமாக பொறுப்பற்ற வகையில் வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க சட்டமுள்ளது. சென்னையில் இருந்து 464 கிமீ தூரமுள்ள மதுரைக்கு, இரவு 10 மணிக்கு கிளம்பும் வண்டி, 5 மணி நேரம் 30 நிமிடத்தில், சராசரியாக 85 கிமீ வேகத்தில் மதுரைக்கு வரும் பட்சத்தில் அது வாகன சட்ட வேக வரைமுறைக்கு உட்பட்டதா?
              இந்திய மோ.வா. சட்டப்படி கனரக பயணிகள் போக்குவரத்து வாகனம், மணிக்கு 65 கிமீக்கு மேல் செல்ல தடையும், அபராதமும் விதிக்க சட்டம் உள்ளது. தோராயமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ஓடும் வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளார்களா?

             5. படிக்கட்டில் நின்றபடி, தொங்கியபடி பயணம் செய்ய அனுமதித்தால் ரூ.100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. சென்னையில் அரசுப்பேருந்துகளில் படிக்கட்டில் தொங்காத மாணவர்களைப் பார்ப்பதே அரிது. எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?
            6. குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ. 2000 அபராதம், 6 மாதம் சிறை விதிக்க சட்டம் சொல்கிறது. சமீபத்தில் போதையுடன் பயணிகளிடம் பிடிபட்ட தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனருக்கு சட்டம் என்ன தண்டனை அளித்துள்ளது? அப்பாவிகள் உயிரை எமனிடம் சேர்க்க முற்பட்ட குடிபோதை ஓட்டுனர் மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனரா?
                      டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6821. அங்கு வரும் வண்டிகளின் எண்ணிக்கையோ பல ஆயிரம். நாளொன்றுக்கு ஒரு கடைக்கு வரும் போதை ஆசாமி ஒருவர் வீதம் 6821 வண்டிகள் மீது வழக்குப்போட முடியுமா? தமிழ்நாட்டின் அவலமே இதுதான். குடிக்காதவர் ஹெல்மெட் மறந்து வைத்து விட்டு போனால் அபராதம்... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் கூட அபராதம் போட போலீசுக்கு அதிகாரமில்லை. நீதிமன்றமே நேரடியாக டாஸ்மாக் கடை முன் வண்டிகளை நிறுத்த தடை விதிக்கலாமே?
              7. மோசமான டயர் கொண்ட வண்டிக்கு ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் சொல்கிறது. அரசுப்பேருந்துகளின் டயர் நிலைக்கு எவ்வளவு அபராதம் போடப்பட்டுள்ளது?
           8. அதிவேகத்துடன் ஓட்டப்படும் வண்டிக்கு, அபராதம் ரூ. 1000 விதிக்க சட்டமுள்ளது. மோ.வா. ச 112 இன் படி ஒவ்வொரு வாகனத்திற்கும் வேகம் குறிப்பிடப்பட்டு இருக்கும்போது அதிவேகமாக செல்லும் வகையில், வாகனம் தயாரிக்க நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது. உதாரணமாக இரு சக்கர வண்டி 65 கி.மீ.க்குள்தான் செல்லவேண்டும் என்றால் 120 கி.மீ.க்கு ஓட்டும் அளவிற்கு வண்டி வடிவமைப்பை அனுமதிப்பதேன்?
          9. உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், கருப்பு நிற ஸ்டிக்கர் நீக்காமல் ஓடும் பணக்கார கார்களை போலீசாரால் நிறுத்தி அபராதம் விதிக்க முடியுமா? இரு சக்கர வாகனச் சாவியை பிடுங்குவது போல காரை நெருங்கி பார்க்கும் தைரியம் உள்ளதா?
           10. பக்க கண்ணாடி, சைகை விளக்கு, ஒலிப்பான் (ஹாரன்) இல்லாமை, அதி வேகத்துடன் முந்திச் செல்வது (over taking ) போன்றவற்றிற்கும் மோ.வா சட்டம் ரூ.100 அபராதம் விதிக்கச் சொல்கிறது. இன்றைக்குள்ள பெரும்பாலான ஆட்டோக்களில் பக்க கண்ணாடி இருக்காது. இடதுகைப் புறமாக முந்திச் செல்வதில் ஆட்டோக்கள் முதலிடம் பிடிக்கின்றன. இதுவரை எத்தனை வாகனங்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்?
         11. அனைத்து அரசு, தனியார் வாகனத்தின் ஹெட் லைட்டுகள் (முகப்பு விளக்குகள்) கண்கள் கூசும் அளவிற்கு உள்ளது. கண்கள் கூசும் அளவிற்கு ஹெட் லைட்டுகள், ஒரு வண்டிக்கு 10 விளக்குகள், பகலில் கூட விளக்கு வெளிச்சம் போட்டு கண்கள் கூசச் செவதற்கு இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. இதுவரை எத்தனை வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளார்கள்?
         12. இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம், காரில் பின் இருக்கையில் அமர்பவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் எனச் சொல்லாதது ஏன்?
          13. நிறுத்தக்கூடாத இடத்தில்ஆட்களை ஏற்றி அனைத்து வாகனத்திற்கும் இடையூறு செய்யும் மினி பஸ், ஆடோக்கள் மீது சட்டப்படி எவ்வளவு அபராதம் இது வரை விதிக்கப்பட்டுள்ளது? போக்குவரத்திற்கு இம்சை செய்யும் கார்கள், அரசியல் கட்சிக் கொடியுடன் நிறுத்தப்படும் வண்டிகளுக்கு போலீசாரால் அபராதம் விதிக்க முடியுமா? அப்பளம் போல நொறுங்கிப்போகும் நான்கு சக்கர வண்டிகளின் விபத்தின் விகிதம் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
          14. சென்னையில் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் வாரம் ஒருநாள் சென்னையின் முக்கிய இடங்களில் இருசக்கர வாகன பந்தயம் நடத்துவது போக்குவரத்துப் போலீசாருக்கு தெரியுமா...சமீபத்தில் சென்னையில் அப்பாவி உயிர்கள் பலியான சம்பவங்கள் அதன் விளைவுதான் என தெரிந்தும், அதற்கான உரிய சட்டப்பிரிவுகளில்தான் காவல்துறை வழக்குப்பதிந்ததா? காலம் காலமாக நடந்துவரும் இந்த பந்தயத்தினால் முக்கிய சாலைகளில் பயணம் செய்யவே பொதுமக்கள் அஞ்சுகின்றனரே அது காவல்துறைக்கு தெரியுமா?
              சட்டப்படிதான் நடக்க வேண்டும் எனச் சொல்லும் காவல் துறை மீது லஞ்சப்புகாரும், பாலியல் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. சட்டப்படி யார் நடவடிக்கை எடுக்க முடியும்? ஏற்கனவே லஞ்சப்புகாரில் முதலிடம் வகிக்கும் போலீசார், ஹெல்மெட் மூலம் தொடர்ந்து முதலிடம் பெறுவார்கள் என்ற (அவ) நம்பிக்கையை தகர்க்க லஞ்ச ஒழிப்பு போலீசார்,                 
               " சட்டப்படி" நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் நம்புகிறார்கள்.
                   நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில் உடன்பாடுதான். ஆனால் ஹெல்மெட் மட்டுமே முக்கியம் எனக் கருதாமல் இதர போக்குவரத்து சட்ட விதிமுறைகளை போலீசார் முறையாக அமல்படுத்தினால் விபத்திற்கு விடுதலை கட்டாயம் உண்டு.
- எஸ். அசோக் (விகடன் செய்திகள்-24.06.2015)
                  மரியாதைக்குரிய எஸ்.அசோகன் அவர்களது ஆதங்கத்தை வரவேற்கிறேன்.அதே சமயம் ஹெல்மெட் போடுவதை ,நீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாக கூறி இருக்கிறீர்....வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment