Saturday, January 9, 2016

சாலை பாதுகாப்பு கல்வி - சாலை பற்றிய அறிவு - 01

                              ROAD SAFETY EDUCATIONAL IN TAMIL.-01
    
மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம்.சாலை பாதுகாப்பு கருதி அன்பன் பரமேஸ் டிரைவர் சத்தியமங்கலத்திலிருந்து உங்களுக்காக எழுதுவது......
           நாம் உயிர்வாழ்வதற்கான அனைத்து தேவைகளையும் போக்குவரத்து மூலமாகவே நிறைவேற்றி வருகிறோம்.குறிப்பாக சாலை போக்குவரத்து மிகவும் முக்கியமாக பயன்படுகிறது.  சக்கரமும் சாலையும் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு போக்குவரத்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.வாகனங்களும் பெருகிக்கொண்டே வருகின்றன.நடந்துசெல்வது தொடங்கி இரு சக்கர வாகனங்கள் முதல் பல சக்கர வாகனங்கள்வரை பலரும் பல வடிவங்களிலும் பல்வேறு வேகங்களிலும் வாகனங்களை ஓட்டிக் கொண்டோ,வாகனங்களில் பயணம் செய்துகொண்டோ இருக்கிறோம்.
        சாலையில் பாதசாரிகளாக,பயணிகளாக,பொருட்களை எடுத்துச்செல்பவர்களாக,வாகனம் ஓட்டுபவர்களாக போக்குவரத்து செய்கிறோம்.  நமது பாதுகாப்பிற்காகவே சாலைவிதிகளும்,மோட்டார் வாகன சட்டங்களும்,காவல்துறைசட்டங்களில் சிலவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறியாமல் பயணத்தின்போது சாலைவிதிகள் மற்றும் சாலை பற்றிய அறிவு இல்லாமலும்,வாகனங்கள் பற்றிய அறிவு இல்லாமலும் பயணிப்பது எப்படி என்றுகூடத்தெரியாமலும் சாலையில் போக்குவரத்து செய்து விபத்துக்கு காரணமாகிறோம்.

  விபத்து ஏற்படும்போது கொடுங்காயம்,நிரந்தர ஊனம்,உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன.மோதிய வாகனங்கள் சேதம்,ஏற்றிவந்த பொருட்கள் சேதம் போன்ற இழப்புகளும் ஏற்படுகின்றன.அவ்வழியே போக்குவரத்து தடங்கல் ஏற்பட்டு  அந்த சாலையில் பயணிக்கும் மற்றவர்களுக்கும் மன உளைச்சல்,தேவைகள் இழப்புடன்,நேர இழப்பும் ஏற்படுகின்றன.
  விபத்தில் சிக்குண்ட நமக்கு வருமான இழப்புடன்,பொருளாதார இழப்பும் ஏற்பட்டு நம் குடும்பத்தாருக்கும் நம்பியுள்ளவர்களுக்கும் மன உளைச்சல் மற்றும்  உடல் வேதனையோடு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்படுகிறது.அத்துடன் காவல்துறை,போக்குவரத்துத்துறை,மீட்பு பணித்துறை,மருத்துவத்துறை,சட்டத்துறை,காப்பீட்டுத்துறை, போன்ற சம்பந்தப்படவர்களுக்கு வேலைப்பளுவும் ஏற்படுகிறது.

        அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துக்களை வேடிக்கை பார்க்கிறோமே தவிர விபத்தில் சிக்குண்டவர்கள் அனுபவிக்கும் வேதனைகளையோ,இழப்புகளையோ,விபத்துக்கான காரணங்களையோ,விபத்தை தவிர்ப்பதற்கான செயல்பாடுகளையோ  சிந்தனை கூட செய்வது இல்லை.   ( parameswaran driver)
'சாலை பாதுகாப்பு  நம் உயிர் பாதுகாப்பு'மட்டுமின்றி  'சமூகத்தின் கூட்டுப்பொறுப்பு'.ஆதலால்  போக்குவரத்து அவசியமாகிவிட்ட இன்றைய சூழலில் சாலை பாதுகாப்பு கல்வி அனைவரும் பெறுவது அவசியம்.ஆதலால் பாதுகாப்பான பயணத்திற்கு சாலைவிதிகள் பற்றியும்,மோட்டார் வாகன சட்டங்கள் பற்றியும் கற்போம்.
(1) சாலை அறிவு (2)பயணப்பாதுகாப்பு (3)வாகன அறிவு (4)மோட்டார் வாகன சட்டங்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

(1) சாலை பற்றிய அறிவு................. 
        சாலைகள் நமது நாட்டின் நிலப்பரப்பிற்கேற்ப சரிவுகளாகவோ,மேடு பள்ளமாகவோ,வளைவுகளாகவோ,குறுகிய பாதைகளாகவோ, கிளைச்சாலைகள் மற்றும் பிரதானச்சாலைகள் சந்திப்புகளாகவோ,அமைந்துள்ளன.அரசாங்கத்தின் பொருளாதாரம் மற்றும் போக்குவரத்துக் குறைவுக்கேற்ப பராமரிப்பு குறைவாக பழுதடைந்தோ உள்ளன.
                    சாலைகளை, நகர்ப்புறச் சாலைகள் என்றும்,கிராமப்புறச் சாலைகள் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
 (1)நகர்ப்புறச் சாலைகளை, வீதி,பிரதான சாலை,நேர்ச்சாலை,ஆர்டீரியல் சாலை , எனவும், 
   (2)கிராமப்புறச் சாலைகளை, விரைவுச்சாலைகள்,தேசிய நெடுஞ்சாலைகள்,பெரிய மாவட்டச்சாலைகள்,மற்ற மாவட்ட சாலைகள்,கிராமச்சாலைகள் எனவும் பலவகைப்படுத்தலாம்.

 நகர்ப்புறச்சாலைகள்,
 வீதி.
       பொதுமக்கள் குடியிருப்புகளில் அமைக்கப்பட்டுள்ள பாதையாகும்.வீதிகள்  நகரின் பிரதானச்சாலைக்கு செல்ல பயன்படுகின்றன. 

பிரதானச்சாலை.
    இது நகரத்தின் பல பகுதிகளில் முக்கிய போக்குவரத்தை எடுத்துச்செல்கிறது.

நேர்ச்சாலை.
    நகரத்தின் பல பகுதிகளிலிருந்து நகரத்தின் மையத்திற்குப் போக்குவரத்தை நேராக எடுத்துச் செல்லும் சாலையாகும்.

ஆர்டீரியல் சாலை.

        இது நகரத்தின் மிகவும் முக்கியமான சாலையாகும். கிராமப்புறச்சாலைகள்  நகரத்தினுள் நுழையும் போது ஆர்டீரியல் சாலைகளாக மாறிவிடும்.

கிராமப்புறச் சாலைகள்,
 விரைவுச்சாலைகள்,
    விரைவுச்சாலைகளை  தங்க நாற்கரச் சாலைகள் என்றும் கூறப்படுகிறது.
 மத்திய அரசால் பராமரிக்கப்படுகிறது.நான்கு முதல்  ஆறு தடச்சாலைகளாக பயன்படுத்தப்படுகிறது.நாட்டின் பாதுகாப்பு மற்றும் துரிதப்போக்குவரத்துக்காக விரைவுச்சாலைகள் போடப்படுகின்றன.கி.மீ.கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.
  
தேசிய நெடுஞ்சாலைகள்,
           தேசிய நெடுஞ்சாலைகளை மத்திய அரசு பராமரிக்கிறது.இரண்டு தடம் முதல் நான்கு தடச்சாலைகளாக பராமரிக்கப்படுகிறது.விரைவான போக்குவரத்திற்கு பயன்படுகிறது.மாநிலங்களின் தலைநகரங்களை இணைக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் மஞ்சள் நிறம் பூசப்பட்டு இருக்கும்.

மாநில நெடுஞ்சாலைகள்,
             மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோமீட்டர் கற்களில் பச்சை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

பெரிய மாவட்டச்சாலைகள்,
          பெரிய மாவட்டச்சாலைகளை மாநில அரசு பராமரிக்கிறது.இருதடப்போக்குவரத்திற்கு ஏற்ற சாலையாகும்.கிலோ மீட்டர் கற்களில் நீல வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

மற்ற மாவட்டச்சாலைகள்,
           மற்ற மாவட்டச்சாலைகளை மாநில அரசின் உதவியுடன் பஞ்சாயத்து யூனியன் பராமரிக்கிறது.கிலோ மீட்டர் கற்களில் ஆரஞ்சு வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.

கிராமச்சாலைகள்,
            கிராமச்சாலைகளை பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.ஒரு தடச்சாலையாகும்.எதிரில் வாகனம் வந்தால்  இரு வாகனங்களும் சாலையை விட்டு விலகிச்செல்ல வேண்டும்.கிலோ மீட்டர் கற்களில் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு இருக்கும்.  (பரமேஸ்வரன் டிரைவர்)
                   
   சாலையின் பாகங்களாக,,,,,
               வாகனம் செல்லும் பாதை,பக்கவாட்டிலுள்ள புயங்கள்,கேம்பர்,நடைபாதை,கெர்ப்,வேகத்தடை,தொடர்வேகத்தடை,சூப்பர் எலிவேசன்,காப்புக்கற்கள்,பிரதிபலிப்பான்கள்,காப்புச்சுவர்,வட்டச்சுற்றுப்பாதை,தீவுத்திடல்,சேனலைசர்,வழிப்படுத்தும் சேனலைசர்,தொடர்ச்சியாக கட்டப்பட்டுள்ள மீடியன்,விட்டு விட்டு கட்டப்பட்டுள்ள மீடியன்,தடுப்புச்சுவர்,மாற்றுப்பாதை,சுரங்கப்பாதை,சிறு பாலங்கள்,தரைமட்டப்பாலம்,உயர் பாலம்,தாழ்வான பாலம்,மேம்பாலம் என பலவகைகளாகப்பிரிக்கலாம். 

சாலை வரைகோடுகள்,
       போக்குவரத்து ஒழுங்குபடுத்துவதற்காக சாலையில் வரையப்படும் கோடுகளை மூன்று வகைகளாகப்பிரிக்கலாம்.அவை நீளவாட்டில் வரையப்படும் கோடுகள்,அகலவாட்டில் வரையப்படும் கோடுகள்,மற்ற வரைகோடுகள் ஆகும்.

 சாலையின் நடுவில் வரையப்படும் கோடுகளும்,தடங்களின் கோடுகளும் நீளவாட்டில் வரையப்படுகின்றன.

சாலையின் அகலவாட்டில் , ஜீப்ரா கிராஸிங் கோடுகள்,பாதசாரிகள் கடக்கும் கோடுகள்,வாகனங்களை நிறுத்தும் கோடுகள் வரையப்படுகின்றன.

மற்ற வரைகோடுகளாக சாலை ஓரக்கல் கோடுகள்,திசை காட்டும் கோடுகள்,தடங்களின் எண்கள், கொண்டை ஊசி திருப்பம் கோடுகள்,வேகத்தடைக்கோடுகள்,நிறுத்தி வைக்கும் கோடுகள்,பேருந்து நிறுத்தும் கோடுகள்,ஐலேண்ட்,சேனலைசர்,மீடியன்,ரவுண்டானா போன்ற வரைகோடுகள்,
 ஸ்டாப்,ஸ்லோ,கார்,சைக்கிள் போன்ற எழுத்துக்கள் என வரையப்பட்டிருக்கும்.

     இன்னும் தொடரும்......
 அன்புடன்
 C.பரமேஸ்வரன்,    
         9585600733
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம்.

தொடரும்.......................2016 ஜனவரி 9 ந் தேதி 

No comments:

Post a Comment